search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துத்துக்குடி தூப்பாக்கி சூடு"

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் நடந்த மறியலில் மணக்கோலத்தில் புதுமண தம்பதியினர் கலந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.#bansterlite #sterliteprotest
    ராயபுரம்:

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து இன்று காலை தண்டையார்பேட்டை சிக்னல் அருகே திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் சுமார் 250-க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர்.

    இதில் ஆர்.கே.நகர் பகுதி தி.மு.க. பொறுப்பாளர் மருது கணேஷ், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் மற்றும் காங்கிரஸ், ம.தி.மு.க. உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    மறியல் போராட்டம் நடந்து கொண்டிருந்த போது தண்டையார்பேட்டை சிக்னல் அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் புது வண்ணாரப்பேட்டை நாகூரான் தோட்டத்தை சேர்ந்த பாரி- தமிழரசிக்கு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த சிறிது நேரத்தில் புதுமண தம்பதிக்கு அப்பகுதியில் மறியல் நடந்து கொண்டு இருக்கும் தகவல் கிடைத்தது.

    தூத்துக்குடி துப்பாக்கி சூடை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்த அவர்கள் மணக்கோலத்தில் திருமண மண்டபத்தில் இருந்து வெளியே வந்தனர்.

    பின்னர் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சியினருடன் சேர்ந்து சாலையில் அமர்ந்து கோ‌ஷங்கள் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதைத் தொடர்ந்து துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் புதுமண தம்பதியினர் பாரி-தமிழரசி ஆகியோர் தாங்கள் கொண்டு வந்திருந்த மெழுகுவர்த்திகளை அங்கிருந்தவர்களிடம் கொடுத்தனர். பின்னர் அவர்களும் மெழுகுவர்த்தியை ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.

    சிறிது நேரத்துக்கு பின்னர் புதுமண தம்பதியினர் போராட்டத்தை முடித்துக் கொண்டு திருமண மண்டபத்துக்கு சென்றுவிட்டனர். இதுபற்றி புதுமாப்பிள்ளை பாரியிடம் கேட்டபோது, ‘தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானது வருந்தத்தக்கது. இதனை கண்டித்து இன்று காலை அரசியல் கட்சியினர் திருமண மண்டபம் அருகே போராட்டத்தில் ஈடுபடுவதை அறிந்தோம். இதில் நாங்களும் பங்கு கொள்ள வேண்டும் என்று நினைத்தோம்.

    எனவே நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டோம். தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்த மனநிம்மதி ஏற்பட்டுள்ளது’ என்றார்.

    புதுமண தம்பதியினர் சென்ற சிறிது நேரத்தில் தண்டையார்பேட்டை, புதுவண்ணாரப்பேட்டை போலீசார் அங்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட எர்ணாவூர் நாராயணன், மருதுகணேஷ் உள்ளிட்ட 250 பேரை கைது செய்தனர். அவர்கள் பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.#bansterlite #sterliteprotest
    ×